நற்றிணைப் பாடல்களிலும் நெடிய பாடல்களைக் கொண்ட தொகை நூல் அகநானூறு. இதன் பாடல்களின் அளவு சிறுமை 13 அடி. பெருமை 31 அடி. இந்நூல் நெடுந்தொகை நானூறு என்னும் பெயரையே முதலில் பெற்றிருந்தது. இத்தொகை நூலின் பாயிரமும் 'முன்னர் தொகுத்த நல் நெடுந்தொகைக்கு' என்று குறிப்பிடுகிறது. அகநானூற்றுப் பாயிரத்தை இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்வதரையன் பாடியுள்ளான். பின்னர் அது அகம், அகப்பாட்டு, அகநானூறு என வழங்கப்பட்டது.
நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி; தொகுத்தோன் உப்பூரி குடிகிழான் மகன் உருத்திர சன்மன். பூரிக்கோவும் உருத்திரசன்மனும் ஒருவரே என்பதை முன்னர்க் கண்டோம். குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களைத் தொகுத்த பின்னர், அந்த அனுபவ முதிர்ச்சியால் உருத்திரசன்மன் இத்தொகை நூலை முப்பிரிவுகளாகப் பிரித்ததோடு குறிப்பிட்ட எண் பெற்ற பாடல் குறிப்பிட்ட திணை பற்றிய பாடலாக அமையுமாறு செய்தான். 1 முதல் 120 பாடல்கள், 'களிற்றி யானை நிரை' எனவும் 121 முதல் 300 வரையுள்ள 180 பாடல்கள் ' மணிமிடைபவளம்' எனவும், 301 முதல் 400 வரையுள்ள 100 பாடல்கள் 'நித்திலக்கோவை' எனவும் பெயர் பெற்றுள்ளன.
'களித்த மும்மதக் களிற்றியானை நிரை
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு பண்பின் முத்திறம்'
என்று பாயிரம் தெரிவிக்கிறது.
இத்தொகை நூலில் ஐந்திணை கூறும் பாடல்கள் உள்ளன. உருத்திரசன்மன் அவற்றை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தினான். 1,3,5,7,9,11,13 என்று ஒற்றை எண்ணாக வருபவை பாலைத் திணைப் பாடல்கள். 4,14,24 என நான்கு என்னும் எண்ணைப் பெற்றவை முல்லைத் திணைப் பாடல்கள். 6, 16, 26 என ஆறு என்னும் எண்ணைப் பெற்றவை மருதத்திணைப் பாடல்கள். 10, 20, 30 எனப் பத்து என்னும் எண்ணைப் பெற்றவை நெய்தல் திணைப் பாடல்கள். 2, 8, 12, 18 என இரண்டு எட்டு என்னும் எண்களைப் பெற்றவை குறிஞ்சித் திணைப் பாடல்கள். இந்த வகுப்பு முறையை வழங்கும் வெண்பாவைக் காண்போம்.
'ஒன்று மூன்று ஐந்து ஏழ் ஒன்பான் பாலை; ஓதாது
நின்றவற்றின் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம்/ அணி நெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்று'
அகநானூற்றில் கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள 400 பாடல்கள், பாலை-200, முல்லை-40, மருதம்-40, நெய்தல்-40, குறிஞ்சி-80 என்று அமைந்துள்ளன.
இந்நூலின் முதல் 90 பாடல்களுக்கு ஒரு பழைய குறிப்புரை உண்டு. இதை முதலில் 1920இல் கம்பர் விலாசம் வே.இராசகோபால ஐயங்கார் பதிப்பித்தார். இவரே 70 பாடல்களுக்கு உரை எழுதினார். பின்னர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் சேர்ந்து நூல் முழுவதற்கும் அறிய உரை அருளி உள்ளனர்.

அகப்பொருள் உரைக்கும் அகநானூறு, வரலாற்றுச் செய்திகளை வழங்குவதில் புறநானூற்றோடு போட்டி இடுகிறது. வட நாட்டு மன்னர்களான நந்தர்கள் ஒன்பதின்மர் கி.மு. நான்காம் நூற்றாண்டில் பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை ஆண்டார்கள். அப்போது அலெக்சாண்டர் கி.மு. 326 இல் இந்தியாவின் மீது படை எடுத்தான். அவன் பாடலிபுரம் வரை வந்து விடுவானோ என்று சிந்தை நொந்த நந்தர்கள் தம்மிடமுள்ள விலைமதிப்பறியா அணிமணிகளைத் திண்மைமிக்க ஒரு பேழையில் வைத்துப் பூட்டினர். பின்பு பாடலிக்கு அடுத்த கங்கையாற்றின் நீர்ப்போக்கை இரண்டாகப் பிரித்து, இடையேயிருந்த மண்ணைத் தோண்டி ஆற்றின் அடியில் பெருநிதிப் பேழையை வைத்தனர். பேழையை மூடி அதன் மீது ஈயத்தை உருக்கி வார்த்து நீர் நுழையாது காத்தனர். பின் குழியை மூடிக் கங்கை நீர் முன்போல் பிரிவின்றிப் பெருகிப் பாயுமாறு செய்தனர். இது வரலாற்று மறைச் செய்தி. நந்தர்கள் தன் செல்வத்தை மறைத்த இரகசியம் தமிழ்ப் புலவர்களுக்கும் தெரிந்திருந்தது. இவ்வரலாற்று இரகசியத்தை அகநானூற்றின் இரு பாடல்கள் வெளியிடுகின்றன.
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ"
-அகம்: 201
"நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவன்
தங்கன் வாழி தோழி"
- அகம்: 25
இவ்விரு பாடல்களையும் வழங்கியவர் மாமூலனார். இவரே மோரியர் பற்றிய செய்திகளையும் கூறுகிறார். மோரியர் படையெடுப்புத் தமிழகத்தில் நிகழ்ந்தததையும், மோரியருக்கு வடுகர் துணை நின்றதையும் மாமூலர் வழங்கிய பாடல் 281 அறிவிக்கிறது.
"முரண்மிகு வடுகர்முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து
ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து அவரோ சென்றனர்"
இவ்வாறு படையெடுத்தவன் சந்திரகுப்த மோரியனின் மாமனான பிந்துசாரன் என்றும், படையெடுத்த காலம் கி.மு. 310, கி.மு. 273 என்றும் ஆய்வாளர் கருதுவர்.
வடவேந்தர்களைப் பற்றிக் கூறும் அகநானூறு தமிழக வேந்தர்களைப் பற்றியும் பேசுகிறது. உதியன் சேரல், சேரலாதன், கோதை மார்பன் முதலிய சேர வேந்தரும், கரிகாலன், கிள்ளி வளவன், தித்தன் முதலிய சோழ வேந்தரும், ஆலங்கானத்துச் செழியன், பேசும் பூண் பாண்டியன், பழையன் மாறன் முதலிய பாண்டிய வேந்தரும் பல்வேறு குறுநில மன்னரும் அகநானூற்றில் இடம்பெறுகின்றனர்.
இராமன் கோடிக்கரையில் பறவைகள் ஒலியை அடக்கிய திறம், பரசுராமன் அரச குலத்தை அழித்த தீரம், முருகன் சூரனைக் கொன்ற வீரம், கண்ணன் யமுனைத் துறையில் நீராடிய கோபியர் ஆடைகளைக் கவர்ந்த திருவிளையாடல் முதலிய இதிகாச, புராண செய்திகள் பல, அகநானூற்றில் உள்ளன.
தமிழரின் திருமண நிகழ்ச்சியை 86, 136 ஆகிய இரு பாடல்கள் விளக்குகின்றன. இவ்விரு பாடல்களை ஆராய்ந்த பி.டி.சீனிவாச ஐயங்கார், "இவ்விரு பாடல்கள் விளக்கும் திருமண நிகழ்ச்சிகளில் ஆரியச் சார்பான சடங்கு எதுவுமே இல்லை. (In the ancient Tamil rite of marriage; there is absolutely nothing Aryan) " எரி வளர்த்தல் இல்லை; தீவலம் செய்தல் இல்லை; தட்சிணை வாங்குவதற்குப் புரோகிதன் இல்லை" என்று தமது History of the Tamils என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
தலைவிக்கும் தோழிக்கும் உள்ள நெஞ்சம் கலந்த நேசத்தைப் பேசுகிறது ஒரு பாடல். "தலைவியும் நானும் பிரிதல் இன்றிக் கூடிய, உவர்த்தல் இல்லாத நட்பினால் இருதலைப் பறவை போல ஈருடலும் ஓர் உயிருமாக இருக்கிறோம்" என்னும் தோழி கூற்றைக் கபிலரின் கவிதை தருகிறது.
"யாமே பிரிவு இன்று இயைந்த துவராநட்பின்
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே"
" இரப்போர் ஏந்தும் கை நிறையும்படி இன் மகிழ்ச்சியுடன் புதிய புதிய பொருளைத் தந்து பூரிப்பதற்காக அரும்பொருளைத் தேடவேண்டும்", என்று பொருளின் பொருளை ஓர் அகப்பாடலின் அகத்திலுறச் செய்கிறார் நல்லிசைப் புலவர் கீரனார்.
"இரப்போர் ஏந்துகை நிறைய/ புரப்போர்
புலம்புஇல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம்"
- அகம்: 389
அகநானூறு தமிழ்த் தேனாறு; தமிழகம் பெற்ற தனிப்பெரும் பேறு.

0 கருத்துகள்