Looking For Anything Specific?

நற்றிணை

     


     குறுந்தொகை அடிகளிலும் மிக்கு, ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுதி நற்றிணை.  திணை என்னும் சொல் ஆகுபெயராய் அகத்திணை நூலைக் குறிக்கிறது. ' திணை எழுபது' முதலிய நூற்பெயரிலும் இத்தன்மையைக் காணலாம்.  சிறிய பாடல்களும் இன்றிப் பெரிய பாடல்களும் இன்றி அளவான பாடல்களைப் பெற்றமையால் இத்திணை, நல் என்னும் அடைமொழி பெற்று 'நற்றிணை'யாயிற்று, என்பர்.  இதன்கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளமையால் இது 'நற்றிணை நானூறு' எனவும் வழங்கப்பட்டது.  எனினும் 234 ஆம் பாடல் எனச் சிலரும், இறையனார் அகப் பொருள் உரையில் மேற்கோளாக வரும், 'சான்றோர் வருந்திய வருத்தமும்' எனத் தொடங்கும் பாடலே மறைந்து போன நற்றிணைப் பாடல் எனச் சிலரும் கூறுவர்.  385 ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போனது.  56 பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரியவில்லை.

     நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  தொகுத்தவர் பெயர் ஏட்டில் இல்லை.  நற்றிணையை 1914-இல் உரை எழுதிப் பதிப்பித்தவர், பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர்.  பின்னே ஒளவை சு.துரைசாமி பிள்ளை விளக்கமான பேருரை வகுத்துள்ளார்.

     நற்றிணைப் பாடல்களின் கற்பனை அழகையும் கவி நயத்தையும் வியந்தே, எட்டுத் தொகைப் பெயர்கள் கூறும் வெண்பா பாடிய புலவன் இதனை முதலில் வைத்துள்ளான் எனக் கருதுவர்.

நற்றிணையில் திருக்குறள் கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

'பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்'

என்னும் குறள் வெண்பாவை,

'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்'




என்ற ஆசிரியப்பாவாக்கி அதே காருத்தைச் சிறிதும் மாற்றாமல் தருகிறது நற்றிணை.  இவ்வாறு குறளின் குரலை வெளிப்படுத்திய புலவரின் பெயர் மறைந்தது ஒரு குறையே.

     கடமை அறிந்து நாட்டைக் காக்கும் நல்லரசனின் குடை நிழலான ஆட்சி இனிய இன்பம் தரும் நிழலைப் போன்றது, என்று இறைமாட்சியின் இயல்பை இயம்புகிறது.

'கடனறி மன்னர் குடைநிழற் போலப் 
பெருந் தண்ணென்ற மரநிழல்'

     கடற்கரைப் பகுதியில் தேரைச் செலுத்தும் பாகன் தேர்ச் சக்கரத்தில் நண்டுகள் சிக்கி நசுங்காதபடி எச்சரிக்கையோடு செலுத்திய ஜீவகாருண்யத்தை ஒரு பாடல் சித்தரிக்கிறது.

'புணரி பொருத பூமணல் அடைகரை 
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊரே'

(ஆழி - தேர்ச் சக்கரம்; வலவன் - தேர்ப்பாகன்; வள்பு - குதிரைகளை இணைக்கும் வார்)

     இப்பாகனின் உயிர்க்குறுகண் செய்யாத உயர்பண்பு சாலையில் செல்லும் எறும்புகளுக்கு இன்னல் தராத பண்டைய சாலமன் அரசனின் பண்புடன் ஒத்தது.

     அகப் பொருட் சிறப்பை - அதிலும் தலைவியின் தன்னிகரற்ற அன்பை நற்றிணை தெற்றென விளக்குகிறது.  பொருள் வயின் பிரிந்த தலைவனை நினைத்து வருந்தி மெலியும் தலைவி, தான் இறக்க நேரும் என்பதை எண்ணி அஞ்சவில்லை;  இறந்தபின் எடுக்கும் மறுபிறவியில் தலைவனை மறக்க நேருமோ என்றே அஞ்சுகிறாள்.

'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே'

     இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் தன் தலைவனே தொடர்ந்து கணவனாக அமைய வேண்டும் என்று அவாவும் அன்புத் தலைவியைப் பாடியவர், அம்மூவனார்.

     செல்வத்தில் பிறந்து செலவமாய் வளர்ந்து செழித்தவள் ஒரு தலைவி.  பிறந்த வீட்டில் தேன் கலந்த பாலைத் தான் பருக அடம் பிடிப்பவள் அவள்.  காதலில் ஒருவனை அவள் கைப்பிடித்த பின்பு கொண்ட கணவன் குடிவறுமை கண்டது.  அதை அறிந்து செல்வத் தந்தை கொடுத்தனுப்பிய கொழுஞ்சோற்றை மனத்தாலும் நினையாமல், ஒரு பொழுது உண்டு மறுபொழுது பட்டினி கிடந்து, கணவனின் வருவாய்க்குத் தக்க வாழ்வு மேற்கொண்ட வண்மையை கற்பின் திண்மையைச் செவிலித் தாய் நேரிலே கண்டு, பொற்றொடி கற்பியல் நற்றாய்க்குப் பெருமிதத்தோடு உரைப்பதாக அமைந்துள்ளது ஒரு பாடல்.

'கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப் 
பொழுது மறுத்து உண்ணும் சிறுமதுகையளே'

     தமிழ் மகளுக்கு வேதமாகும் பண்பை விளக்கும் இப்பாடல் போதனார் பாடியது.  இக்கருத்தைத் தழுவியே, "பொன்னேர் பூட்டி, வெள்ளி வித்திடினும் வேண்டேன் பிறந்தகத்து ஈண்டிய வாழ்வு"  என்று கூறிப் பிற்காலத்தே ஒரு தலைவி பெருமையடைகிறாள்.

     சங்க இலக்கிய இன்பத்தைத் துய்க்க விரும்புவோர்க்கு உற்ற துணை, இந்நற்றிணை.




கருத்துரையிடுக

0 கருத்துகள்