Looking For Anything Specific?

குறுந்தொகை

     எட்டுத் தொகை நூலில் முதலில் தொகுக்கப்பட்ட நூல், இது.  இதற்குக் 'குறுந்தொகை நானூறு' என்றும் பெயர் இருந்ததை இறையனார் களவியல் உரையால் அறியலாம்.  இதன் சிற்றெல்லை நான்கு அடி; பேரெல்லை எட்டடி.

     தற்போது கிடைக்கும் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன.  307, 391 ஆகிய இரு பாடல்களும் குறுந்தொகையின் பேரெல்லையை மீறி ஒன்பது அடிகள் பெற்றுள்ளன.  391 ஆம் பாடல் சில பாட பேதங்களுடன் எட்டடியாகச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது.  307 ஆம் பாடல் எல்லா ஏடுகளிலும் ஒன்பது அடி கொண்டதாகவே அமைந்துள்ளது.  எனவே இப்பாடலை நீக்கினால் ' குறுந்தொகை நானூறு' என்னும் பெயர் பொருத்தமாக அமைகிறது.

     'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இரு நூற்றைவர்' என்னும் பழங் குறிப்பு நூலின் இறுதியில் காணப்படுகிறது.  குறுந்தொகையின் 380 பாடலுக்குப் பேராசிரியர் உரை வகுக்க.  எஞ்சிய 20 பாடலுக்கு நச்சினார்க்கினியர் உரை வழங்கினார்.  இதை,

" நல் அறிவுடைய தொல் பேராசான்
கல்வியும் காட்சியும் காசினி அறிய 
பொருள்தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு
இது பொருள் என்றவன் எழுதாதொழிய
இது பொருள் என்றதற்கு ஏற்பவுரைத்தும்" 

    எனவரும் நச்சினார்க்கினியர் இயற்றிய சீவகசிந்தாமணியின் உரைச் சிறப்புப் பாயிரத்தில் உணரலாம்.  இவ்விரு உரையாசிரியர்கள் குறுந்தொகைக்கு எழுதிய உரைகள் கிடைத்தில.  குறுந்தொகையை முதலில் 1925இல் வெளியிட்டவர் தி.சௌ.அரங்கசாமி ஐயங்கார்.  பின்பு 1937இல்  இதைத் தமது உரையுடன் சிறந்த பதிப்பாக வெளியிட்டார் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

     "நல்ல குறுந்தொகை" என வழங்கப் பெறும் இந்நூலின் பாடல்களையே உரையாசிரியர்கள் மிக அதிகமாக மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளனர்.  இத்தொகை நூலின் 235 பாடல்கள் மேற்கோள்களாக உரைகளை அணி செய்து நிற்கின்றன.

     'நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக்கிழியைத் தருமிக்கு அருளிய வரலாற்றுக்கு அடிப்படையாய் அமைந்த 'கொங்குதேர் வாழ்க்கை'ப் பாடல் இந்நூலின் இரண்டாம் பாடலாய் அமைந்துள்ளது.  இதை இயற்றிய புலவரின் பெயர் 'இறையனார்' எனக் காணப்படுகிறது.  காவிரி கவர்ந்த காவலன் ஆட்டனத்தியைத் தேடி அலைந்த அவன் துணைவியும் கரிகால் வளவன் மகளுமான ஆதிமந்தியார் பாடிய 'மள்ளர் குழீஇய விழவினானும்' என்னும் பாடல் நூலில் 31ஆம் பாடலாக அமைந்துள்ளது.  குட்டுவன், திண்டேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், நன்னன், பாரி, வல்வில் ஓரி, நள்ளி முதலான பெருநில வேந்தர், குறுநிலமன்னர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் உள்ளன.

     குறுந்தொகை பாடிய புலவர்களில் ஏறத்தாழ முப்பதின்மர் பெயர் உருத்திரன், உரோடகத்துக்காரன், உலோச்சன், சாண்டிலியன், பவுத்திரன், மாதிரத்தன், பிரமந்தன் முதலான வடமொழிப் பெயர்களாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, டாக்டர் மா. இராசமாணிக்கனார், 'இவற்றை நோக்க, வட மொழியாளர் செல்வாக்குத் தமிழகத்தில் படிப்படியாக உயர்ந்து வந்ததை அறியலாம் எனக் குறிப்பிடுகிறார்.  இத்தகைய வடமொழிப் பெயர்களை எல்லாத் தொகை நூல்களிலும் பரக்கக் காணலாம்.

     குறுந்தொகை காட்டும் காதலரின் பேரன்பு, படிப்போரிடமும் படியும் வல்லமை வாய்ந்தது.

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே".

     என்னும் தேவ குலத்தார் இயற்றிய பாடலில், தலைவி தலைவனது அன்பின் அகற்சியை-ஆழத்தை-உயரத்தை விளக்குகிறாள். இதனினும் சிறந்த முறையில் காதலனின் காதலை அளவிட்டுக் கூறமுடியாது.

     முன்பின் கண்டறியாத ஆணும் பெண்ணும் முதன் முறையாகக் கண்டதும் காதல்கொண்டு கலந்து விடுகின்றனர்.  அன்பு உள்ளங்களின் இரண்டறக் கலந்த கலப்பினை,

"செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே".




என்று விளக்குகிறார் புலவர்.  இச்சீரிய பாடலைச் செய்தவர் பெயர் தெரியாது.  அதனால் இவர் பாடிய பாடலின் உயிர்த் தொடரையே இவருக்கு உரிய பெயராக அமைத்து 'செம்புலப் பெயனீரார்' என வழங்கினர்.  இவ்வாறு பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர்தம் பாடல் தொடரால் பெயரிடுதல் தொகை நூல் தொகுத்தவர் கைக்கொண்ட சிறந்த முறையாகும்.

     காதல் நோய் தாக்காமல் காத்துக் கொள்வது முடியவே முடியாது என்பதை ஒரு தலைவன்,

"ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின் 
கையில் ஊமன் கண்ணின் காக்கும் 
வெண்ணெய் உணங்கல் போலப் 
பரந்தன்று இந்நோய்; நோன்றுகொளற்கு அரிதே"

எனக் கூறித் தன் இயலாமையை எடுத்துரைக்கிறான்.  இப்பாடலை இயற்றியவர் வெள்ளி வீதியார்.  இவர் பாடிய எட்டுப் பாடல்கள் குறுந்தொகையில் உள்ளன.

     தலைவனின் அன்பைக் கூறும் தலைவி, அவன் பிரிவு தரும் வருத்தத்தையும் கூறுகிறாள்:

"நோம்என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
புன்பலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்குஇன் புதுமலர் முள் பயந்தாங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே"

படிக்கும்போதே கண்ணீர் வடிக்கச் செய்யும் ஓசை நயமும், எழில் நிறைந்த நெருஞ்சி மலர் இன்னல் தரும் முள்ளாக மாறித் துன்புறுத்துவது போல இன்பம் தந்த காதலர் துன்பம் தந்தாரே என்னும் உவமை நயமும் சிறப்பு மிக்கன.  பெண் மனத்தைப் பெண்ணே நன்கு உணர முடியும்.  நம் உள்ளத்தை அள்ளும் இப் பாடலை வழங்கியவர் அள்ளூர் நன்முல்லை என்னும் பெண்மணியார்.

     குறுந்தொகைப் பாடல்கள் எட்டே வரிக்குள் எட்டாத இன்பத்தை எல்லாம் எட்டிப் பிடித்து, அவற்றை நம் மனத்தை ஒட்டி உறவாட வைக்கும் உயர்வு உடையன.  பெருந்தொகை கொடுத்தும் பெறத் தக்கது, குறுந்தொகை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்