Looking For Anything Specific?

தொகைநூல் வரலாறு

     ஒரு மொழி தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சிக்குப் பின்னரே இலக்கண அமைதி நிறைந்த பாட்டுத் தோன்ற முடியும்.  பலர் எழுதிய பல நூறு பாடல்களைத் திரட்டி ஒரு குறிப்பிட்ட வரையறையுடன் தொகுத்துத் தொகை நூலாக்க இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.  தொகை நூல்களின் தேவையை முற்றிலும் உணர்ந்து கதைகள், கவிதைகள், அறிவியல் கட்டுரைகள், பழமொழிகள், பொன்மொழிகள் முதலிய தொகை நூல்கள் ஒவ்வொரு மொழியிலும் எண்ணிறந்தன எழுந்த காலம் இருபதாம் நூற்றாண்டே.  தொகை நூல் என்பது ஒரு மொழியின் இலக்கிய ஏற்றத்தைக் காட்டும் இமயச் சிகரமாகும்.  தமிழில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பே செம்மை வாய்ந்த தொகை நூல்கள் தோன்றின.  அவை மொத்தம் எட்டு.

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை"

என்னும் வெண்பா, எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது.

     இவ்வெட்டினுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் உரைப்பன.  புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறப்பொருள் உரைப்பன.  பரிபாடல் அகம் புறம் என்னும் இரு பொருளையும் இயல்பும் இவ்வெட்டுத் தொகையுள் காலத்தால் முற்பட்ட பாடல்களைக் கொண்டது புறநானூறு.  ஆனால் முதன் முதலில் தொகுக்கப்பட்டது குறுந்தொகை.

     குறுந்தொகையைத் தொகுத்தவன் பூரிக்கோ.  தொகுப்பித்தவன் பெயர் தெரியவில்லை.  நற்றிணையைத் தொகுத்தவன் பெயர் தெரியாது; தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன்வழுதி.  அகநானூற்றைத் தொகுத்தவன் உப்பூரி குடிகிழார் மகன் உருத்திரசன்மன். தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி!  குறுந்தொகைப் பாடல்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் பெற்றன. நற்றிணைப் பாடல்கள் ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரெண்டடிப் பேரெல்லையும் உடையன.  அகநானூறு பதின்மூன்றடிச் சிற்றெல்லையும், முப்பத்தோரடிப் பேரெல்லையும் கொண்டது.  இம்மூன்று நூல்கள் ஒவ்வொன்றும் நானூறு பாடல்கள் கொண்டவை;  யாவும் ஆசிரியப்பாவால் இயன்றவை.  இத்தன்மைகளை ஒன்று சேர்த்து ஆயும்போது இம்மூன்று தொகை நூல்களையும் ஒருவரே தொகுத்திருக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது.  பூரிக்கோவும் உப்பூரிகுடிகிழார் மகனும் ஒருவரே என முடிவு செய்வதும், பன்னாடு தந்த மாறன் வழுதியும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஒருவரே எனக் கொள்வதும் ஏலும்.

     கடைச் சங்கம் புரந்த பாண்டியருள் ஒருவனான உக்கிரப் பெருவழுதி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் அல்லது அதற்குச் சிறிது முன்னர் வாழ்ந்தவன்.  அவனுடைய ஆதரவோடு பூரிக்கோ என்னும் உருத்திரசன்மன் தமிழ்ப் பாடல்களைத் தேடித்தொகுக்கும் செயற்கரிய செந்தமிழ்ப் பணியை மேற்கொண்டார்.  அதற்காக அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பிற்காலத்தே சாமிநாதையர் செய்தது போலச் சிற்றூர் தோறும் சென்று புலவர் வீடுகளில் எல்லாம் புகுந்து தமிழ் ஏடுகளைத் தேடியெடுத்துப் புதையல் கண்டவரைப் போன்ற புது மகிழ்வோடு சேகரித்திருக்க வேண்டும்.  தமிழ் நாட்டில் இவ்வாறு கவி ஆய்வு மேற்கொண்ட முதல்வராக தொகை நூல் வழங்கிய முதல்வராகத் திகழ்ந்தவர், பூரிக்கோ.

     தாம் திரட்டிய பாடல்களில் பெரும்பான்மையன அகப்பாடல்களாக இருக்கக் கண்டு, அகப்பொருள் பாடல் தொகுதியை உருவாக்க முயன்றார், பூரிக்கோ.  அடிவரையறையை வகுத்துக் கொண்டு மிகச் சிறிய பாடல்களைக் குறுந்தொகையாவும், ஓரளவு நீண்ட பாடல்களை நற்றிணையாகவும், நெடிய பாடல்களை நெடுந்தொகை (அகநானூறு) யாகவும் தொகுத்தார்.  தொகுப்பின் செம்மை நெடுந்தொகையில் சிறந்திருப்பதற்குக் காரணம், முன்னரே இரண்டு நூல்களைத் தொகுத்த அனுபவமே!

     பாண்டியன் உக்கிரப்பெருவழுதி மூன்று அகப்பொருள் நூல்களைத் தொகுத்தமை அறிந்த யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல், தானும் அப்பணியில் பங்குகொள்ள விரும்பிக் கூடலூர் கிழாரைத் தொகுப்புப்பணி மேற்கொள்ளச் செய்திருக்க வேண்டும்.  கூடலூர் கிழார், ஐந்திணை பாடுவதில் வல்ல ஐந்து புலவர்களை அணுகி, ஒரு திணைக்கு நூறு பாடல்கள் வீதம் இயற்றித் தருமாறு வேண்டிப் பெற்றுத் தொகுத்தளித்தார்.  பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடிப் பெரெல்லையும் உடையதாக அமைய வேண்டும் என்பதையும் கூடலூர் கீழாரே வரையறுத்தார் எனக் கொள்வதும் பொருந்தும்.  குறுந்தொகைப் பாடலுக்கும் குறுகிய பாடல்களின் தொகைநூல் என்பதால் இந்நூலுக்கு ஐங்குறுநூறு என்று பெயரிட்டுள்ளார், கூடலூர் கிழார்.  இக்காலத்தில் Commissioned Script என்று கூறுகிறார்களே, அது போலவே கூடலூர் கிழார் திட்டமிட்டு ஐந்து புலவர்களை அணுகி அவர்களைத் தாம் வேண்டியவாறு பாடச் செய்து அவற்றைத் தொகுத்து நூலாக்கினார் எனக் கொள்வது தகும்.  மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்தபோது கூடலூர் கிழார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பதை நோக்கினால் தொகுப்பித்த காவலனுக்கும் தொகுத்த பாவலனுக்கும் உள்ள நெருக்கம் புலனாகும்.

     அகப்பொருள் பாடல்களில் கலிப்பாவால் ஆன ஒரு தொகை நூல் கலித்தொகை.  இதுவும் ஐங்குறுநூறு போல ஐந்து புலவர்கள் ஐந்திணை பற்றிப் பாடிய பாடல்களின் தொகை நூல் எனக் கூறும் வெண்பா ஒன்று உண்டு.  எனினும் இந்நூல் முழுவதையும் நல்லந்துவனாரே இயற்றினார் என்றே  ஆய்வாளர் கருதுவர்.  கலித்தொகை என்பது தொகை நூல் வரலாற்றில் மற்றொரு வளர்ச்சியாகும்.  நல்லந்துவனார் முந்தைய அகப்பொருள் தொகைகளின் யாப்பான ஆசிரியத்தை விட்டுக் கலிப்பாவைத் தேர்ந்த திறம் போற்றத்தக்கது.  தொகை நூல்களில் காலத்தால் பிற்பட்டது கலித்தொகையே. எட்டுத் தொகையில் ஒருவரே முழுதும் எழுதிய பாடல்கள் கொண்ட தொகைநூல் இது ஒன்றே.  இதில் 150 பாடல்கள் உள்ளன.  இதனை முன்மாதிரியாகக் கொண்டே திணை மாலை நூற்றைம்பது என்னும் நூலும், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது முதலிய நூல்களும் தோன்றின.

     புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட தொகைநூல் புறநானூறு.  இதனைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை.  முதற் சங்கத்துப் புலவர் பாடலையும் கொண்டது இந்நூல்.  

     பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பாக்களை - மொத்தம் நூறு பாக்களைக் கொண்டது பதிற்றுப்பத்து.  இந்நூலையும் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பெயர் தெரியவில்லை. பாடல்கள் யாவும் பாடாண் திணையில் அமைந்தவை.  ஒரே திணையைப் பற்றிய பாடல்களின் தொகுதியாய் அமைந்தது இது ஒன்றே.  தொகை நூல் வரலாற்றில் இது ஒரு புதுமை.  பிற தொகை நூல்களில் இல்லாத தூக்கு, துறை, வண்ணம், பெயர் ஆகிய குறிப்புகள் ஒவ்வொரு பாடலிலும் காணலாம்.  தொகுப்பாசிரியரின் தனித் திறன் இதனால் விளங்கும்.

     தொகை நூல்கள் அகப்பொருள் அல்லது புறப்பொருள் என்று ஏதேனும் ஒரு பொருள் பற்றியதாக அமைய, அகம், புறம் என்னும் இருபொருள் கூறும் புரட்சியைச் செய்த தொகை நூல் பரிபாடல்.  இது கலிப்பா போல, பரிபாடல் என்னும் யாப்பால் அமைந்த பாடலின் தொகுதி.  இந்நூல் 70 பாடல்களைக் கொண்டது.  இன்று கிடைப்பன 22 பாடல்களே.  பரிபாடலின் ஒவ்வொரு பாடலும் அதற்குரிய பண்ணையும், பண்ணமைத்த இசைவாணரின் பெயரையும் பெற்றுள்ளது.  பிற தொகை நூல்கள் பெறாத மற்றொரு தனிச் சிறப்பு இது.

     எட்டுத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட பின்னர் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகிய ஐந்தினுக்கும் அவ்வத் தொகை நூற்பாடலின் அமைப்பில் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடி இணைத்தார், பாரதம் பாடிய பெருந்தேவனார்.  தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் காட்டும் 'எரி எள்ளு அன்ன நிறுத்தன'  எனத் தொடங்கும் பாடலை, பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து என ஊகித்து, நூலில் இணைத்தனர், இக்கால ஆய்வாளர்கள்.  பரிபாடல் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெயர்  தெரியவில்லை.  கலித்தொகையின் கடவுள் வாழ்த்தை, நூலாசிரியர் நல்லந்துவனாரே இயற்றியுள்ளார்.

     எட்டுத்தொகை நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் எட்டு மைல்கற்கள் போன்றன.  அவற்றின் பிற சிறப்புக்களை இனித் தனித்தனியே விளக்குவோம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்