'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாடினார் நாமக்கல் கவிஞர். தமிழனைத் தலைநிமிர்த்தி நிற்குமாறு செய்வதே சங்க இலக்கியந்தான். இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும், காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கற்பனைக் கலப்பின்றிப் படம் பிடிக்கும் அற்புதக் கண்ணாடியே சங்க இலக்கியம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததையும், முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததையும், அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்ந்து சிறந்ததையும், உரைக்கிறது சங்க இலக்கியம். அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிவுற்றதையும், அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்தத்தையும், மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததையும், அவர் தங்கமதலைகள் ஈன்று அமுதூட்டித் தழுவியதையும் விழுமியமுறையில் விளக்குவது சங்க இலக்கியம்.
பண்டைய தமிழ் நாட்டின் மண்ணையும் விண்ணையும், மக்களையும், மாக்களையும், பயிர்களையும், உயிர்களையும், மலையையும், கலையையும் அவற்றின் தோற்றத்தையும் ஏற்றத்தையும், வாழ்வையும், தாழ்வையும் துல்லியமாக நம் கண்முன்னே நிறுத்தி விந்தை புரிவது சங்க இலக்கியம். தமிழர்களின் களவிலும், கற்பிலும், ஊடலிலும், கூடலிலும்; நகையிலும், பகையிலும், போரிலும், புகழிலும், வளத்திலும், வறுமையிலும், கொடையிலும், படையிலும், கோபத்திலும், குணத்திலும் அறமே முற்றிலும் ஆட்சி செய்ததை அறிவிப்பது சங்க இலக்கியம்.
தமிழனின் தொன்மைக்கும் தோலாப் பெருமைக்கும் சான்றாக நிற்கும் பட்டயங்களே, சங்கப் பாடல்களாகும்.
மனித வாழ்வில் அடையத்தக்க பேறுகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கே! இவற்றுள் அகப்பொருளாய் அமைந்த இன்பமே வாழ்வின் உயிர்ப் பண்பு - உயிர்க்கூறு - உயிர் நாடி. இன்பம் விழைவது இயல்பு. இன்பம் காண மனிதன் பொருளைத் தேடுகிறான்; பொருளைக் கொண்டு அறம் நாடுகிறான். இன்பமும் பொருளும் அறமும் செம்மயாய்ச் செய்பவன், நான்காம் பேற்றை - வீட்டுப் பேற்றை - இயல்பாகவே அடைகின்றான். அந்த இலட்சியத்தையே தொல்காப்பியரின் பொருளதிகாரம் போதிக்கிறது. இந்த இலக்கணத்தின் வழி நின்று இலங்குவதே சங்க இலக்கியம். இது அகம்; புறம் என்னும் இருபிரிவு பெற்றுள்ளது.
பல்குணத்தால் ஒத்த தலைவனும் தலைவியும் காதலித்துக் கைப்பிடித்துக் கலந்து வாழும் இல்லற வாழ்வைச் சொல்வதே அகப்பொருள். அகப்பொருளுக்கு உரிப்பொருள்கள், முதற்பொருள், கருப்பொருள் ஆகிய மூன்றும் உண்டு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளுக்கு முறையே புணர்தல் (காதலர் களவிலே கலத்தல்), இருத்தல் (தலைவன் வினைமேல் பிரிந்து செல்லத் தலைவி அவனை எதிர்பார்த்து இல்லத்தில் காத்திருத்தல்) , ஊடல் (தலைவன் பரத்தையற் பிரியத் தலைவி அவனுடன் ஊடுதல்), இரங்கல் (தலைவன் பிரிவால் தலைவி இன்னலுற்று ஏங்குதல்), பிரிதல் (தலைவன் பொருள் கருதிப் பிரிந்த போது தலைவி, வருந்துதல்) ஆகியன உரிப்பொருளாம். நிலமும் பொழுதும் முதற்பொருளாகும். குறிஞ்சிக்கு மலையும், முல்லைக்குக் காடும், மருதத்துக்கு வயலும், நெய்தலுக்குக் கடலும் நிலங்களாகும். மழை வளங்கரப்ப, முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வறண்ட நிலமாக வடிவெடுக்கும். அதுவே பாலைக்கு நிலமாகும். ஒவ்வொரு நிலத்திலும் உள்ள தெய்வம் , விலங்கு, பறவை, பயிர், மரம், உணவு, தொழில் கருப்பொருள்களாகும். அகப்பாடல்கள் இம்முப்பொருள்கள் அமையப் பாடப்பெற்றவை.
அகப்பாடல் பாடும் புலவர் தாம் படம் பிடிக்கும் நிகழ்ச்சி எந்தத் திணையைச் சேரந்ததோ அந்தத் திணையின் நிலத்தையும் பொழுதையும் கருப்பொருளையும் அமைத்துப் பாடும் மரபு மேற்கொண்டிருந்தனர். பின்னணியின் செம்மையில் பருவமும் உணர்வும் பன்மடங்கு பெருகும். கூடிக் களிக்கின்ற காதலரை வாடி மடிகின்ற மரங்களின் முன்னே நிறுத்துவதினும், உடலுக்குக் குளிர்ச்சி தரும் மலையில், உள்ளத்துக்குக் குளிர்ச்சி தரும் மரஞ் செடிகளின் முன்னே நிறுத்தினால் அக்காதலரின் காதல் பன் மடங்கு சிறக்கும். இவ்வாறு சங்கப் புலவர்கள் பாடிய மரபு , அவர்கள் காலத்துக்கு முன்னரே நாட்டுப் பாடல்களில் அமைந்திருந்தது என்றும் அம்மரபைப் பின்பற்றியே சங்கப் புலவர்கள் அகப்பாடல்கள் இயற்றினர் என்றும் டாக்டர் மு. வரதராசன் குறிப்பிடுகிறார்.
"நிலந்தோறும் இயற்கைப் பொருள்களும், தொழில்களும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருந்தமையால், நிலத்துக்கு நிலம் நாட்டுப் பாடல்களும் வெவ்வேறு வகையாக அமைந்தன. சங்க இலக்கியம் எழுந்த காலத்தில் அந்த நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைப்பட்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைப் பாடல்களாக அமைந்தன" என்றும், "ஒரு காதல் நிகழ்ச்சியைக் கற்பனை செய்து பாடும்போது இவ்வாறு அதற்குரிய நிலம், பொழுது,பறவை, விலங்கு, மரம், பூ முதலிய இயற்கைப் பொருள்கள் ஆகியவற்றையும் அமைத்துப் பாடும் மரபு நெடுங்காலமாக இருந்து வந்தது. ஊர் ஊராக மக்கள் எழுதாமலே பாடிவந்த நாட்டுப் பாடல்களிலேயே அந்த மரபு இருந்து வந்தமையால், புலவர்கள் அந்த மரபுக்களை அவ்வாறே கையாண்டு இலக்கியம் படைத்தனர்" என்றும் டாக்டர் மு.வ. கூறுகிறார்.
அகப்பாடல்கள் இயற்கை எழிலுடன் இணைந்தவை. பெரும்பாலானவை கூற்றுகளாக அமைந்தவை. ஒரு சிறு கதையை, ஓரங்க நாடகத்தைக் கவிதை வடிவில் தந்தைப் போல அவை திகழ்கின்றன. அவை நமக்கு உணர்த்துவது, மாசற்ற அன்பின் மாட்சியையேயாகும். கற்பனை அல்லது உண்மை நிகழ்ச்சிகளில் உள்ளம் பறிகொடுத்த புலவர்கள் அவற்றுக்குத் தந்த கற்பனை வடிவமே அகப்பாடல்கள். புறப்பாடல்கள் நூற்றுக்கு நூறு உண்மை. மக்களின் வீரம், கொடை, புகழ் முதலியவற்றைக் கடுகளவு கற்பனையினையும் கலக்காமல் விளக்கும் கவிதைகளே புறப்பாடல்கள். இவை வேந்தன் முதல் வேடன் ஈறாக உள்ள மக்களின் காதல் தவிர்ந்த பிற பண்புகளைப் படம் பிடிக்கின்றன.
சங்க காலத்தில் தோன்றிய எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன யாவும் சங்க இலக்கியத்துள் அடங்கும். எனினும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றையே சங்க இலக்கியம் எனக் குறிப்பிடும் வழக்கம் உண்டு. தொல்காப்பியத்துக்கு உரை வகுத்த பேராசிரியரும் ( மரபியல் 94 ஆம் நூற்பா உரை) நச்சினார்க்கினியரும் (அகத்திணையில் 6 ஆம் நூற்பா உரை) தம் உரைகளில் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமே சங்க இலக்கியம் என உணருமாறு எழுதியுள்ளமை இங்கு அறியத்தக்கது.
சங்க இலக்கியமான பாட்டும் தொகையும் அடங்கிய பதினெண் மேல் கணக்கில், மொத்தம் 2381 பாடல்கள் உள்ளன. இவை தனித்தனி நூல்களாக வெளிவந்துள்ளன. இவையனைத்தையும் ஒரே தொகுதியாகத் தொகுத்து, பாடிய புலவர்களின் அகர வரிசையில் 'சங்க இலக்கியம்' என்னும் பெயரில் சைவ சித்தாந்த மகா சமாஜம் வெளியிட்ட தொண்டு போற்றத்தக்கது.

0 கருத்துகள்