தொன்மைத் தமிழில் தோன்றிய நூல்களில் இன்று நமக்குக் கிடைப்பனவற்றுள் மிக மிகத் தொன்மையானது தொல்காப்பியம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலிய நூல்களுக்குக் காலத்தால் மூத்தது, தொல்காப்பியம்.
தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். இதனை இயற்றிய தொல்காப்பியர், அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர் என்பவர். இக்கூற்றிற்குப் போதிய சான்றுகள் இல்லை. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகத்தில் வழங்கிய பேச்சு மொழியினையும் இலக்கிய மரபினையும் ஆராய்ந்து, தமக்கு முன்னேயிருந்த இலக்கிய நூல்களைக் கற்று எழுத்து,சொல்,பொருள் பற்றி விரிவாகக் கூறும் தொல்காப்பியத்தை இயற்றினார். ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர். இந்நூல், நிலந்தரு திருவின் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியது. இச்செய்திகளைத் தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரம் மூலம் அறிகிறோம்.
சிறப்புப் பாயிரம், "மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" எனக் குறிப்பிடுகிறது. இந்திரனால் செய்யப்பட்ட வடமொழி இலக்கணம், ஐந்திரம் எனப்படும் ஐந்திர வியாகர்ணம். இது பாணினிக்கு முற்பட்டது. எனவே பாணினி காலமான கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது உண்மை. தொல்காப்பியம் சங்க இலக்கியத்துக்குப் பிந்தியது என்று எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறினார். அதற்கு அவர் காட்டிய காரணங்களை மறுத்துத் தொல்காப்பியர் சங்க இலக்கியத்துக்கு முற்பட்டவர் என்பதைத் தெள்ளத் தெளிய நிறுவினார், க. வெள்ளை வாரணனார்.
தொல்காப்பியரைப் 'பல்புகழ் நிறுத்தும் படிமையோன்' எனப் பனம்பாரனார் கூறியிருப்பதாலும், தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களைச் சமண நூல் முறைப்படியே தொல்காப்பியர் வகுத்திருப்பதாலும், இன்ன பிற காரணங்களாலும் தொல்காப்பியர் சமணர் என்று கூறுவோர் உண்டு. ரா.ராகவையங்கார், இவர் வேத நெறியினர் என்பர்.
தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே தமிழில் இலக்கண நூல்கள் பல இருந்தன என்பதனை அகச்சான்றுகளால் அறியலாம்.
'யாப்பென மொழிப யாப்பறி புலவர்'
'புலனென மொழிப புலனுணர்ந் தோரே'
'சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்'
என்பன போன்றவும், "என்ப", "மொழிப", "என்மனார் புலவர்" என்பன போன்றவும் தொல்காப்பியத்தில் இருநூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் வருகின்றன. இதன் மூலம் தொல்காப்பியர் காலத்தில் தமிழில் வழங்கிய இலக்கண நூல்களின் பேரளவை ஓரளவு உணரலாம்.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒன்பது இயல்கள் வீதம் மொத்தம் 27 இயல்கள் உள்ளன. இவை 1602 நூற்பாக்களைப் பெற்றுள்ளன.
எழுத்ததிகாரம்:
நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன இவ்வதிகாரத்தே அமைந்த இயல்கள். இவ்வொன்பது இயல்களில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை 483. தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவங்களையும் வரி வடிவங்களையும், எழுத்துக்களின் வகைகளையும், சார்பெழுத்துக்களையும், மொழிக்கு முதலில், நடுவில், ஈற்றில் நிற்கும் எழுத்துக்களையும் விளக்குகிறது இவ்வதிகாரம். இன்றும் மேனாட்டார் கூறும் ஒலி முறைகளைத் தொல்காப்பியர் அன்றே வகுத்து வரையறுத்து வழங்கியமை வியக்கத்தக்கது.
சொல்லதிகாரம்:
கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்னும் ஒன்பது இயல்களாக மொத்தம் 463 நூற்பாக்களைக் கொண்டது, சொல்லதிகாரம். இதன் கண் திணை-பால்-எண்-இடம் முதலியனவும், வேற்றுமை வகைகளும் மயக்கமும், பெயர்வினைகளும் இன்ன பிறவும் விளக்கப்படுகின்றன. வேற்றுமையைத் தொல்காப்பியர் மூன்று இயல்களில் விளக்குவது தமிழ் இலக்கணத்தே வேற்றுமை பெறும் சிறப்பை உணர்த்தும். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பகுப்பு, பேச்சு வழக்கு, இலக்கிய வழக்கு, பிறமொழி வழக்கு ஆகியவற்றை நுட்பமாக உரைக்கிறது.
'வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே'
எனும் நூற்பா, தொல்காப்பியர் காலத்தில் வடசொற்கள் சில தமிழில் கலக்கும் நிலை ஏற்பட்டு விட்டதைச் சுட்டும். அதுவே, அவ்வடசொற்களைத் தமிழோசைக்கு ஏற்ப மாற்றியே ஒலித்தல் வேண்டும் என்னும் விதியையும் வலியுறுத்தும்.
இவ்வதிகாரத்தில் உள்ள இடையியல், உரியியல் ஆகியன பிற்காலத்தே பிறந்த நிகண்டுகளுக்கு வழிவகுத்த முன்னோடிகள்.
பொருளதிகாரம்:
அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய ஒன்பது இயல்களை 656 நூற்பாக்களில் தருகிறது, பொருளதிகாரம்.
உலகத்தின் எல்லா மொழிகளும் எழுத்து,சொல், யாப்பு,அணி என்பவற்றுக்கு மட்டுமே இலக்கணம் கண்டன. இவற்றை வழங்கும் மனிதனின் வாழ்க்கைக்கு இலக்கணம் கண்டமொழி தமிழ் அன்றி வேறில்லை. பொருளதிகாரம், மனித வாழ்க்கையை உணர்த்தும் உயர் இலக்கணம் கூறாகத் திகழ்கிறது.
மனித வாழ்வு வீட்டுக்குள்ளும் வெளியிலேயும் நடைபெறுவது. வீடு பற்றியன அகப்பொருள் என்றும், வெளிப்பற்றியன புறப்பொருள் என்றும் வழங்கப்பட்டன. அகத்திணையியல் , களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய நான்கும் அகப்பொருள் உரைப்பன. புறத்திணையியலும் மரபியலும் புறப்பொருள் உரைப்பன. பிற இயல்கள் அகம், புறம் ஆகிய இரண்டையும் கூறுவன. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் , பெருந்திணை, கைக்கிளை ஆகிய ஏழும் அகத்திணைகள். திணை என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள். இவற்றுள் முன்னைய ஐந்தும் ஒத்த காதலர் கண்டு காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்டு இல்லறம் என்னும் நல்லறம் நடத்துவதை விளக்கும். தலைவனும் தலைவியும் தாமே சந்தித்துக் காதலித்து மறைவாய்த் தம் காதலை வளர்த்துக் கொள்வது களவு என்றும், திருமனத்திற்குப் பின்னர் அவ்விருவரும் மனையகத்தே ஊடியும் கூடியும் வாழ்வது கற்பு என்றும் அகவாழ்வு இருவகைப்படும். இரண்டுக்கும் அன்பே அடிப்படையாதலின் இவ்வைந்து திணையும் அன்பின் ஐந்திணை என வழங்கப் பெற்றது. அகப்பாடல்களில் வரும் தலைவன், தலைவி முதலியோர் பெயரைச் சுட்டி வழங்கக்கூடாது என்பது தொல்காப்பியம் வகுத்த வழி. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்! கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்!
வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழும் புறத்திணைகள். நகை , அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாட்டை விளக்குவது மெய்ப்பாட்டியல். பாவகைகளை விரித்துரைப்பது செய்யுளியல். இச்செய்யுளுக்கு அணிசெய்யும் உவமையணியைப் பற்றி உரைப்பது உவமயியல். இலக்கியத்திலும், வழக்கிலும் இடம்பெற்ற பல்வகை மரபுகளைப் பற்றிக் கூறுவது மரபியல். தமிழரின் தனிப் பெரும் செல்வமான தொல்காப்பியத்தை நாம் முற்றிலும் அறிந்து உணர்ந்து பயன் துய்ப்பதற்குத் துணை செய்பவை, அதற்குச் சான்றோர்கள் வகுத்த உரைகளே. இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வசிலையார், கல்லாடர் ஆகிய புலவர் பெருமக்கள் உரை வழங்கியுள்ளனர். இந்நூற்றாண்டில் தோன்றிய பேராசிரியர்கள் சிலரும் தொல்காப்பியத்திற்கு உரை வகுப்பதிலும், விளக்க நூல் வரைவதிலும் ஈடுபட்டுப் பெருமையடைந்தனர்.

0 கருத்துகள்